ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன் சம்பந்தமான குர்ஆனிய வசனங்கள்

🔵 اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُم بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ

2. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன்  13:2

🔵 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَأَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

29. அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன்  31:29

🔵 يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ۚ وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ

13. அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

திருக்குர்ஆன்  35:13

🔵 وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன்  36:38

🔵 خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ

5. தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன்  39:5

************************************************************************

ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

இவ்வசனங்களில் (13:2, 31:29, 35:13, 36:38 39:5) சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்றும், ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் கூறப்படுகிறது. 21:33, 36:40 வசனங்களிலும் இவ்வாறு கூறப்படுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கின்ற பூமியே இந்தக் குடும்பத்தின் மையப்பகுதி என்று கூறி, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனை பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

இன்று பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும்போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றது என்று இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டும் இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கும் என்றும் சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத்தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலமும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் கவனித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; அல்லாஹ்வின் வார்த்தையே என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.