உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உயிரினங்களை உண்பது பற்றியான குர்ஆனிய ஆதார வசனங்கள்...
...............................................


   إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
173. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன்  2:173


     حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
3. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன்  5:3


    يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ ۖ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
4. "தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன'' எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன்  5:4


     فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِآيَاتِهِ مُؤْمِنِينَ
118. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன்  6:118


     وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًا لَّيُضِلُّونَ بِأَهْوَائِهِم بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ
119. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.
திருக்குர்ஆன்  6:119


      وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
121. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
திருக்குர்ஆன்  6:121


     قُل لَّا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُ إِلَّا أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَّحِيمٌ
145. "தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன்  6:145


      وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَىٰ قَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ ۖ فَمَا لَبِثَ أَن جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ
69. நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.
திருக்குர்ஆன்  11:69


      وَالْأَنْعَامَ خَلَقَهَا ۗ لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ
5. கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள்.
திருக்குர்ஆன்  16:5


      وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
14. கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!
திருக்குர்ஆன்  16:14


       إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
115. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன்  16:115


     لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۖ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
28. அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
திருக்குர்ஆன்  22:28


       وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ ۖ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ ۖ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ۚ كَذَٰلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
36. (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
திருக்குர்ஆன்  22:36


      وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ
21. கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்!
திருக்குர்ஆன்  23:21
       وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ ۖ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا ۖ وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
12. இரண்டு கடல்கள் சமமாகாது. இது இனிமையானதும், அடர்த்தி குறைந்ததும், அருந்த ஏற்றதுமாகும். அதுவோ உப்பும், கசப்பும் உடையது. ஒவ்வொன்றிலிருந்தும் பசுமையான மாமிசத்தை உண்ணுகின்றீர்கள். நீங்கள் அணிகின்ற ஆபரணத்தை (அதிலிருந்து) வெளிப்படுத்துகின்றீர்கள். நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் அதைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதைக் காண்கிறீர்.
திருக்குர்ஆன்  35:12


     وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ
72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.
திருக்குர்ஆன்  36:72


     اللَّهُ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَنْعَامَ لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ
79. நீங்கள் ஏறிச் செல்வதற்காக உங்களுக்குக் கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள்.
திருக்குர்ஆன்  40:79


      فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
27. அதை அவர்களின் அருகில் வைத்து "சாப்பிட மாட்டீர்களா?'' என்றார்.
திருக்குர்ஆன்  51:27
************************************************************************
உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?
இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர்வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
1. உயிர்வதை என்று சொல்வோர் கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?
2. உயிர்வதை என்று சொல்வோர் கன்றுகளுக்காக தாய்ப்பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?
3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர்வதை இல்லையா?
4. மனிதன் அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்வதை இல்லையா?
5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுயநலத்திற்காகக் கொல்வது உயிர்வதை தானே?
உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்வதை இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?
மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?
இவ்வாறு மாமிசத்தைத் தவிர்ப்பவர்கள் கண்பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணெய்யை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.
எனவே உயிர்வதை என்று சொல்வது போலியான காரணம் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.
சைவம், அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.
இவ்வாறு சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள்மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
போலித்தனமாகவும், முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவும் உயிர்வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.
ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.
அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.
1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.
2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
3) உணர்வு திரும்பியதும், முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
6) பரிசோதனையின்போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.
இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.
1) இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்டபோது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.Gயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.
4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.
மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன.
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது.
3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம், ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும்போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.
எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.
அப்படியானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைச் சாப்பிட வேண்டும்; அவ்வாறு கூறாவிட்டால் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? என்ற சந்தேகம் ஏற்படலாம்.
பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும்போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு உரிமையில்லை.
ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயிரினத்தை அறுக்கும்போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.
அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் என்று கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும்.
இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்குக் கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால்தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும்.
இந்த உறுதிமொழி தான் அறுப்பதற்கான அனுமதியாகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும்.
ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமையாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.
பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலைஎடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை.
இதற்குக் காரணம் பிஸ்மில்லாஹ் தான்.
அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால்தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும், நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.
இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும்போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.
மீனை அறுக்காமல் சாப்பிடுவது ஏன்? செத்த மீன்களைச் சாப்பிடுவது ஏன் என்ற சந்தேகம் உள்ளவர்கள் 505வது குறிப்பைப் பார்க்கவும்.
172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்
வின்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.
விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் இந்த அனுபவத்தை உணர முடியும்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.
இத்தகைய காலகட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடிந்தது? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.